ஆட்சியில் பங்கு ஒத்து வராது என காங்கிரஸ் கட்சியினரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகவே கூறியிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கம் நகர் 1-வது தெருவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு, “மதுரை மாநகராட்சியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சரியான புள்ளிவிவரங்களை முதல்வருக்கு வழங்கவில்லை. 2.57 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். ‘துக்ளக்’ தர்பார் ஆட்சி போல் திமுக ஆட்சி உள்ளது. ஒரு கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் தலித் பெண்கள் பாதிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது திருமாவளவனுக்கு தெரியுமா? தெரியாதா?” என கேள்வி எழுப்பினார்.
திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள் என்ற முதலமைச்சரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என முதலமைச்சர் தானே சொல்கிறார்? மக்கள் சொல்கிறார்களா?” என்றார்.
தேமுதிக ஒரு கட்சியா? என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ”அதை பிரேமலதாவிடம் கேளுங்கள். கேப்டன் விஜயகாந்த் கட்சியிடம் கேளுங்கள்” என்றார்.
ஆட்சியில் பங்கு தருவது ஒத்து வராது என்ற முதலமைச்சரின் கருத்து குறித்த கேள்விக்கு, ”அதை யார் கேட்கிறார், காங்கிரஸ் கட்சி தானே கேட்கிறது. அதை நேரடியாக முதலமைச்சர் அவர்களிடம் சொல்ல வேண்டியது தானே? கடந்த தேர்தலில் வழங்கிய அறிக்கையில் ஒரு சொட்டு கூட மது இருக்காது. இளம் விதவை அதிகமாய் உள்ளனர் என்று கனிமொழி கூறினார். இப்போது இளம் விதவைகள் குறைந்து விட்டார்களா? அதை கனிமொழி கூற வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய செல்லூர் ராஜூ, “பிரதமர் திருப்பரங்குன்றம் செல்கிறாரா? என்று பாஜகவினர் தான் கூற வேண்டும். ஒரு திரைப்படத்தில் எனக்கு உடல் முழுவதும் வியாதி என நடிகர் தாடி பாலாஜி கூறுவார். அனைத்து வியாதிகளுக்கும் ஒரே ஒரு மாத்திரை தீர்வு என்று நடிகர் விவேக் கூறுவார். அதுபோல் ஆட்சி மாற்றம் ஒன்று தான் தமிழ்நாட்டிற்கு முழுமையான தீர்வு. முதலமைச்சர் பயந்துவிட்டார் என்பது தெரிகிறது.
அவருக்கு என்ன பேசுவது என்று தெரியாமல், மோடி, அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவதையும், தேஜ கூட்டணி கட்சிகளுக்கு மக்களின் ஆதரவை பார்த்து முதலமைச்சர் புலம்புகிறார். வடிவேலு திரைப்படத்தில் சுடுகாட்டில் புலம்புவது போல் ’ஐயோ என்னை தவிக்க விட்டார்களே’ என்று முதலமைச்சர் புலம்புகிறார்” என்றார்.

