முதலமைச்சர் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் மட்டும் தான் திமுகவுடையது, மற்ற 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது என்று தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கை குழுவின் வடக்கு மண்டல கருத்து கேட்பு கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை வைத்தனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண்ராஜ், செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்? திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும், உங்களது அறிக்கைக்கும் என்ன மாதிரியான வித்தியாசங்கள்?
இத்தனை ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்தாலும், அடிப்படை வசதிகளே இல்லாமல் நிறைய இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பல இடங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி இல்லை. ஆகையால், தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் அடிப்படை தேவைகள் முதன்மையாக இடம்பெறும். அதனை தொடர்ந்து ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்களும் நிச்சயமாக இடம்பெறும்.
பெண்களை மையப்படுத்தி இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள். அதிமுக கூட மாதம் 2 ஆயிரம் உரிமைத் தொகை என அறிவித்துள்ளது. த.வெ.க.வுக்கு இது மாதிரியான ஐடியா ஏதேனும் இருக்கிறதா?
பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கு வளர்ச்சி கொடுக்கக் கூடிய தேர்தல் அறிக்கையாக எங்களின் அறிக்கை இருக்கும்.
சர்வே எடுக்க சென்ற த.வெ.க.வினரை திமுகவினர் தாக்கியது பற்றி உங்கள் கருத்து என்ன?
இதுவரைக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணமே, பண பலம், ஆள் பலத்தை வைத்து தான். எப்படியெல்லாம் கள்ள ஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்றிருக்கிறது என வரலாறாகவே இருக்கிறது. அதேமாதிரி த.வெ.க.வை மிரட்டி பார்க்கலாம் என முயற்சி செய்கிறார்கள். அது கண்டிப்பாக நடக்காது. மிரட்டினால் பணிய நாங்கள் ஒன்றும் மற்ற கட்சிகள் அல்ல. தலைவரின் தளபதிகள். எங்கள் மீது கை வைத்து திமுக அராஜகம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு ஜனநாயக முறைப்படி எங்கள் பதில் இருக்கும்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் மட்டும் தான் திமுகவுடையது. மற்ற 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை வெறும் ஓட்டு வங்கியாக மட்டும் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு அளிக்காமல் இருப்பது உண்மையான சமூக நீதிக்கு எதிரான செயல் ஆகும். இதிலிருந்தே திமுக எந்த அளவுக்கு சமூக நீதியை பாதுகாக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்ற ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணி கட்சியின் பங்கு இருக்கிறது. இல்லையென்று திமுகவால் மறுக்க முடியுமா? ஆட்சியில் பங்கு கொடுக்க முடியவில்லை என்றால், திமுகவால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? தனித்து போட்டி என அறிவிக்க திமுகவால் முடியுமா?
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா?
கூட்டணி குறித்து எல்லோரும் ஆர்வமாக கேட்டுக் கொண்டே தான் இருக்கிறீர்கள். உரிய நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.
சேலத்தில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது?
சேலம் பொதுக் கூட்டத்திற்கு நாங்கள் கேட்டது ஒன்று… அவர்கள் கொடுத்தது ஒன்று… வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறார்கள். திமுகவினர் மட்டும் தினம் தினம் கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு மட்டும் எப்படி அனுமதி கிடைக்கிறது என தெரியவில்லை. அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அது தான் ஜனநாயகம். பாஜகவை பார்த்து பாசிசம் என திமுக சொல்கிறது. ஆனால், உண்மையான பாசிச கட்சி திமுக தான்.
தேர்தல் அறிக்கை குழு எப்போது விஜய்யை சந்திக்கிறது? எப்போது தேர்தல் அறிக்கை இறுதியாகும்?
ஐந்து கட்டமாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டிருக்கிறோம். விரைவிலேயே அனைத்து பரிந்துரைகளையும் அறிக்கையாக தலைவரிடத்தில் சமர்ப்பிப்போம்” என்றார்.

