டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதேசமயம் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து நடத்தும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களின் அணியை அறிவித்துள்ளது. 15 பேர் அடங்கிய இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா தொடர்கிறார். அதேசமயம் இங்கிலாந்து டி20 தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த தனஞ்செயா டி சில்வா மற்றும் ஈஷன் மலிங்கா ஆகியோர் டி20 உலலக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இலங்கை டி20 அணியில் இடம் பிடித்துவந்த நிலையில், தற்சமயம் மோசமான ஃபார்ம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் உலகக் கோப்பை அணியில் கமிந்து மெண்டிஸ் சேர்க்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய நிலையில், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தனஞ்செயா டி சில்வா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக கமிந்து மெண்டிஸுக்கு இலங்கை டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர அணியின் பேட்டிங்கில் பதும் நிஷங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், கமில் மிஷாரா, சரித் அசலங்கா உள்ளிட்டோரு இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் பவுலிங்கில் மதீஷா பதிரானா, துஷ்மந்தா சமீரா, தசுன் ஷனகாவும், சுழற்பந்து வீச்சில் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இதில் இலங்கை அணி பிப்ரவரி 8ஆம் தேதி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டான்), பதும் நிஷங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, ஈஷான் மலிங்கா.

