பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே சமீபத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது வரி விதித்து வரும் சூழலில் ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரு தலைவர்கள் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலில் வர்த்தக விவகாரம், வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதளமான ‘ட்ரூத்’ (Truth) பக்கத்தில், ”இன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது எனக்கு மிகுந்த பெருமையாக இருந்தது. அவர் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவரும், இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவரும் ஆவார்.
பிரதமர் மோடியுடனான நட்பும் மரியாதையும் காரணமாகவும், அவருடைய வேண்டுகோளின் பேரிலும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%-லிருந்து 18%-ஆக அமெரிக்கா குறைப்பதால் பதிலுக்கு அமெரிக்கா மீதான வரிகள் மற்றும் வர்த்தகத் தடைகளை பூஜ்ஜியமாக (Zero) குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
மேலும் பிரதமர் மோடி அமெரிக்கப் பொருட்களை வாங்குவதாகவும், இதற்கு முன்பைவிட அதிகளவில் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து உள்ளார். மேலும் அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி மற்றும் பிற தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் 500 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட கொள்முதலுக்கும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். பிரதமர் மோடியும் நானும், பல்வேறு காரியங்களை செய்து முடிப்பவர்கள். அது வெளியில் சொல்ல முடியாத ஒன்று” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

