மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவுநாளை முன்னிட்டு, ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான சி.என் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராவார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், திராவிட ஆட்சியை தோற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் மெட்ராஸ் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர்சூட்டினார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3 -ம் தேதி தனது 59வது வயதில் புற்றுநோய் காரணமாக அண்ணா உயிர்நீத்தார். உலகமே வியக்கும்படி அப்போதே அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழக மக்களிடையே அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியும், அண்ணா பெயரை கொண்ட கட்சியும் தான் தமிழ்நாட்டை பல தசாப்தங்களாக மாறி மாறி ஆண்டு வருகின்றன. இந்நிலையில் அண்ணாவின் 57வது நினைவு தினத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவரை நினைவுகூறுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி என்று குறிப்பிட்டுள்ள அவருடைய பதிவில், “நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் வீடியோ ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் இணைத்துள்ளார். தனது சொந்த குரலில் பேசியுள்ள ஸ்டாலின், ‘ஏ தாழ்ந்த தமிழகமே! என்று அண்ணா எழுப்பிய குரல் தமிழகம் எங்கும் எதிரொலித்தது. அவர் படைத்த ஆரிய மாயை தமிழ் இதயங்களில் இன எழுச்சியை ஏற்படுத்தியது. அவர் நடித்த ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ தமிழன எதிரிகளின் கோட்டையை தகர்த்தெறிந்தது. நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்று அவர் நாடாளுமன்றத்திலே முழங்கியதால், தமிழர்களை வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது.
கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தை அண்ணாந்து பார்க்க வைத்தவர் நம்முடைய அண்ணா. அவர் எழுத்துகளை நாம் மீண்டும் மீண்டும் படித்தாக வேண்டும். நான் செய்தவை அனைத்தும் தொடர்ந்தால் அப்போதும் அண்ணாதுரை ஆள்வதாக சொன்னார். ஆக மறைந்தும் அண்ணா நம்மை ஆண்டுகொண்டிருக்கிறார். தமிழகமே! அண்ணாவை படி. அண்ணா வாழ்க! அவர் மூட்டிய தீ பரவட்டும்!” என்று உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.

