அரசியல் காரணங்களுக்காக மத்திய பட்ஜெட் மீது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சுமத்துகிறார் என முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பழனி திரு ஆவினன்குடி கோயிலில் காவடியுடன் சாமி தரிசனம் செய்தார். பின் காவடி எடுத்துக்கொண்டு படிப்பாதை வழியாக தண்டாயுதபாணி சுவாமி கோயிக்குச் சென்று அங்கும் தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டு அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளோம். தமிழக மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் இருக்க வேண்டும் என வேண்டுதல் வைத்துள்ளோம்.
காவடி எடுத்து படிவழியாக செல்லும்போது எச்.ராஜா உடல்நலம் தேறி வரவேண்டும் என்று தனிப்பட்ட வேண்டுதலையும் வைத்துள்ளேன். அவர் பாஜக வளர்ச்சிக்காக நிறைய செய்துள்ளார். பூரண நலம்பெற்று மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தொடர்ந்து பட்ஜெட் குறித்து பேசிய இவர், “இந்த முறை பட்ஜெட்டில் ரூ.53 லட்சம் கோடி செலவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், உட்கட்டமைப்புக்கு மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்தகட்டமாக என்ன தேவையோ அவை கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேகமான ரயில் சேவை, சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்காகவும், தென்னை மரங்களுக்காகவும், முந்திரி மேம்பாட்டிற்காகவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் தென்னை மற்றும் முந்திரி விவசாயிகள் பயனடைவார்கள். ஆதிச்சநல்லூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது இந்தியா முழுமைக்குமான சிறந்த பட்ஜெட். ஆனால் வழக்கம்போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இது, அரசியல் காரணங்களுக்காக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தான். மிகச்சிறப்பான பட்ஜெட்டையே நிர்மலா சீதாராமன் கொடுத்திருக்கிறார் என்பது அதனை முழுமையாக பார்ப்பவர்களுக்கு தெரியும்” என்றார்.
தொடர்ந்து, கோயில்கள் குறித்து பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டிற்கு அதிக வருமானம் தரக்கூடியவை கோயில்கள்தான். ஆனால் இங்கு வருகிற பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் உண்மை. அதனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். தேர்தலுக்கு பின் இந்த கோரிக்கையை மறந்துவிடுவார்கள் என்பதால், அரசுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில், பிப்ரவரி 10ஆம் தேதி பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மணல் குவாரி விவகாரத்தில் தனியார் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அதில் யார் குற்றவாளி என்பது எல்லோருக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்களின் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். தவறு இழைத்தவர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், அவரை கைது செய்து எல்லோருக்குமான முதலமைச்சர் என்பதை ஸ்டாலின் காட்ட வேண்டும். கடுமையான தண்டனை பெற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

