ராணிப்பேட்டை அருகே துணி துவைப்பதற்காக சென்ற 3 சிறுமிகள் விவசாய கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த ஆரூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவருக்கு யுவஸ்ரீ (12), பிரியங்கா (13) என இரு மகள்கள் இருந்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் பிரியா (13). இவர்கள் மூவரும் பொன்னமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 8 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று (ஜனவரி 31) மாலை துணி துவைப்பதற்காக ஆரூர் கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள விவசாய கிணற்றில் துணி துவைக்க இறங்கிய போது, அவர்களுள் ஒரு சிறுமி தவறி தண்ணீரில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்று மற்ற இரண்டு சிறுமிகளும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாகவும் தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு சரியாக நீச்சல் தெரியாத நிலையில், மூவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமிகள் பிரியங்கா, யுவஸ்ரீ, பிரியா
சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. இதனையடுத்து வாழைப்பந்தல் காவல் துறையினருக்கும், கலவை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய 3 சிறுமிகளையும் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு யுவஸ்ரீ, பிரியங்கா, பிரியா ஆகிய மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர்.
தொடர்ந்து, சிறுமிகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

