ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பு சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இந்நாள் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸும் முன்னேறினர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை கைப்பற்றினர். இதில் தனது ஆதிக்கத்தை செலுத்திய நோவக் ஜோகோவிச் முதல் செட்டில் சிறப்பாக செயல்பட்டதுடன் 6-2 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி முன்னிலைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் இருந்து கம்பேக் கொடுக்க தொடங்கிய கார்லோஸ் அல்காரஸ், தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் அல்காரஸ் கைப்பற்றி தனது பதிலடியை கொடுக்க, போட்டி மீதான பரபரப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.
அதன்பின் மூன்றாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட அல்காரஸ் 6-3 என்ற கணக்கில் செட்டை வென்றதுடன் முன்னிலையை பெற்றார். இதனையடுத்து நடைபெற்ற நான்காவது செட் ஆட்டத்தில் ஒருபக்கம் அல்காரஸ் தனது முன்னிலையை தக்கவைக்க முயற்சிக்க, மறுபக்கம் நோவக் ஜோகோவிச் தோல்வியைத் தவிர்ப்பதற்காக கடுமையாக போராடினார்.
இறுதியில் கார்லோஸ் அல்காரஸ் 7-5 என்ற கணக்கில் நான்காவது செட்டை போராடி கைப்பற்றினார். இதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து கார்லோஸ் அல்காரஸுக்கு வெற்றி கோப்பையுடன் சேர்த்து $4.15 மில்லியன் ஆஸ்திரேலிய டார்கள் (தோராயமாக ரூ.25.13 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேற்கொண்டு இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய நோவக் ஜோகோவிச்சிற்கு, கோப்பையுடன் சேர்த்து $2.15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (தோராயமாக ரூ.13 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

