பாகிஸ்தான் அணிக்கு எதிரான யு19 உலகக் கோப்பை சூப்பர் 6 ஆட்டத்தில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் புலவாயோவில் நடபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஆரோன் ஜார்ஜ் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ஆயுஷ் மாத்ரே ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். மேற்கொண்டு அதிரடி தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் 30 ரன்களை சேர்த்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேதந்த் திரிவேதி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 68 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் கனிஷ்க் சௌகான் 35 ரன்களையும், கிலான் பட்டேல் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன் மூலம் இந்திய யு19 அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அப்துல் ஷுபம் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷ்யாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் சமீர் மின்ஹாஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹம்சா சஹூர் – உஸ்மான் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கான் அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஹம்சா சஹூர் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, உஸ்மான் கான் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஃபர்ஹான் யூசுஃப் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர, மற்ற பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் பாகிஸ்தான் யு19 அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் கிலன் படேல் மற்றும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய யு19 அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் யு19 அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்ததுடன், நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.
மறுபக்கம் பாகிஸ்தான் அணியானது தோல்வியை தழுவி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கனிஷ்க் சௌகான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதையடுத்து, பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.

