வேலூர் மாநகராட்சியில் அடி பம்பு மறையும் வகையில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது தொடர்பாக ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்கிரீட் சுவர் அமைப்பு
வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் நிலையில் அதற்கான தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகின்றது. இந்த சுவர் அமைக்கப்படும் பொழுது பயன்பாட்டிலிருந்த அடி பம்பு பயன்படுத்த முடியாத அளவில் கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், செய்தி வெளியான நிலையில், அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த சுவரை அகற்றிவிட்டு போர்வெல்லை மூடி விட்டு சென்றனர். இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது அடி பம்பு மறையும் வகையில் சுவர் அமைத்தது தொடர்பான இந்த விவகாரத்தில் வேலூர் மாநகராட்சி மண்டல உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபுவை சத்துவாச்சாரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

