ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை.
பள்ளியில் கொரோனா
தேனி, ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பாக பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 72 மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று பரவல் பாதித்துள்ளது. இதனையடுது பள்ளியில் உள்ள இதர மாணவர்களிடம் மற்றும் தொற்று பாதித்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மேலும் 19 மாணவர்களுக்கும், பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இரண்டு நாட்களில் ஆண்டிப்பட்டியில் மட்டும், 31 மாணவர்கள் உள்பட 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியின் வகுப்பறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

