துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.
ஷின்சோ அபே உரிழப்பு
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில், அந்நாட்டின் நரா நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது அபே மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது துப்பாக்கிசூடு நடத்தினர். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை எந்த ஒரு முன்னேற்றம் எதுவும் இல்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

