ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போர் குற்றவாளி என அமெரிக்கவின் நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விருப்பப்பட்டது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதை விரும்பாத ரஷ்யா அதை நீண்டகாலமாக எதிர்த்து, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது வெளிப்படையாக போரைத்தொடங்கியது.

மிகப்பெரிய ராணுவ பலம்கொண்ட ரஷ்யா சிறிய நாடான உக்ரைன் மீது தொடுத்த போர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உக்ரைனின் நிலையைக்கண்டு பரிதாபப்பட செய்தது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். ரஷ்யாவின் மீது பல தடைகளை விதித்தனர்.
தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடிவந்த உக்ரைன் ஒரு கட்டத்தில் ரஷ்ய தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்களை போரில் ஈடுபடுத்தியது. பொதுமக்களுக்கு ஆயுதத்தை பயன்படுத்த அனுமதி தந்தது. எனினும் ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களை தாக்கியும் தகர்த்தும் கைப்பற்றி வந்தது.
மாறும் நிலமை
போர் தொடங்கி 21 நாட்களாகிய நிலையில் ரஷ்யாவின் நிலை மாறத்தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ‘உக்ரைன் போரில் ரஷ்யா படைகளையும், தளவாடங்களையும் பெரும் அளவில் இழந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது’ என்று கூறியுள்ளது.

மேலும், ‘ரஷ்ய படையினரின் தாக்குதல்களுக்கு உக்ரைனும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. நாட்கள் செல்ல செல்ல ரஷ்யா கூடுதல் சவால்களை சந்திக்க தொடக்கி இருக்கிறது. குறிப்பாக சிரியாவிலிருந்து 40,000 போர் வீரர்களை அழைத்து வந்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்து வைத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
போர் குற்றம்
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போர்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் பெரும்பாலும் நிறைவேறாது. அங்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கருத்து வேறுபாடுகளை மறந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
பேச்சு வார்த்தைக்கு தயார்

தொடர்ந்து நடைபெற்றுவரும் போர் குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். சாத்தியப்படக்கூடிய கோரிக்கைகளை ரஷ்யா முன்வைக்க வேண்டும். உக்ரைனின் நலனுக்காக பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்க அவகாசம் வழங்க வேண்டும். உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூரியுள்ளார்.
அண்டை நாடுகளின் ஆதரவு
ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்து இருக்கும் உக்ரைன் தலைநகர் கீவுக்கு அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவேனியா, செக் குடியரசு தலைவர்கள் சென்றனர். அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலென்ஸ்கி, இப்படிப்பட்ட அண்டை நாட்டு நண்பர்கள் சேர்ந்தால் போரில் நிச்சயமாக ரஷ்யாவை தோற்கடிக்க முடியும் என்றார்.

