சங்கரன்கோவில் அருகே 4 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்ததையடுத்து, அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவனையின் கண்ணாடிகளை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நெற்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரின் 4 வயது மகள் சிவ யாழினி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகியை பார்ப்பதற்காக முள்ளிகுளத்தைச் சேர்ந்த ராம்காந்த் என்பவர் நேற்று தனது காரில் பள்ளிக்கு வந்துள்ளார். சந்திப்பு பிறகு, அவர் தனது காரை எடுப்பதற்காக பின்புறமாக இயக்கியுள்ளார். அப்போது, அங்கிருந்த சிறுமி சிவ யாழினி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட ஆசிரியர்களும், ஊழியர்களும், அவரை பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, உடற்கூராய்வுக்காக சிறுமியின் உடல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சிவ யாழினியின் புத்தகப்பை மட்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அவருடைய பெற்றோர், ‘என் மகள் எங்கே’ என்று கேட்டபோது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை சக மாணவர்கள் கூறியுள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும், குழந்தையின் இறப்பு குறித்து உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
மேலும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியங்குடியில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமியின் பெற்றோரும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டம் நீடித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இருவரும் வராததால் மறியல் போராட்டம் இரவு வரை நீடித்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மருத்துவமனையின் முகப்பு கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து, எஸ்.பி. மாதவன் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும், எந்நேரத்திலும் அவர்கள் மறியலில் ஈடுபடலாம் என்பதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

