நில மோசடி புகாரில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மற்றும் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக இருந்த ஜெய்பாலாஜி என்பவர், மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் 2 வீட்டு மனைகளை தனது மனைவியின் பெயரில் பத்திரப்பதிவு செய்தார்.
ஆனால், அதற்கான தொகையை வழங்காமல் அலைக்கழித்ததாக ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோர் மீது நிலத்தின் உரிமையாளர் சீதாராமன் காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், கலாவதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 3-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, ஜெய்பாலாஜி மீது வேலூரில் மற்றொரு நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும் வாதிடுகையில், “ஜெய்பாலாஜியின் மனைவி கலாவதிக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர், காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் விசாரணை பாதிக்கப்படுகிறது.
மேலும், ஜெய்பாலாஜியின் சகோதரர் சரவணசுந்தர் மற்றும் ராமகிருஷ்ணன், பாக்கியலட்சுமி, நாகலிங்கம் ஆகியோர் நில உரிமையாளர் சீதாராமனை வீடு புகுந்து, ஜெய்பாலாஜி மீதான புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர்.
அவர்கள் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே ஜெய்பாலாஜி தரப்பினரின் ஜாமீன் மனுக்கள் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி 2 வழக்குகளின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர்-நீதிபதி
இந்த மனுக்களின் மீது நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்திருந்தார். அதில், “சமீப காலமாக சில அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறைந்த விலையில் சொத்துகளை தருமாறு மிரட்டுகின்றனர். இந்த வழக்கும் அதுபோன்ற சம்பவத்தை வெளிப்படுத்துகிறது.
மனுதாரர்கள் தங்களை மதுரை மாநகராட்சி மேயருக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறி நிலத்தை பெற்றுள்ளனர். இது சம்பந்தமான புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தவுடன், புகார் அளித்தவரை மனுதாரர்களின் கூட்டாளிகள் மிரட்டியுள்ளனர். இது போன்ற வழக்குகளில் ஆவணங்களை முறையாக பரிசீலித்து ஜாமீன் வழங்குவது அவசியமாகிறது. இந்த வழக்கில் சிக்கிய கணவன், மனைவி மீதான குற்றச்சாட்டுகளும் தீவிரமானவை. இதனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அதேபோல கணவன், மனைவிக்கு ஆதரவாக புகார்தாரரை மிரட்டியதாக பதிவான வழக்கில் சிக்கிய 4 பேரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

