கடலூர் மாவட்டம் எழுத்தூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மீது, பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராமநத்தம் போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், அதற்கு முன்னால் ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியில் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரில் சென்னையைச் சேர்ந்த பிரசாந்த், ஐசக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிரி என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமநத்தம் போலீசார், உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கர்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகள் தொடர்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆ்ழ்ந்துள்ளனர். விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

