ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி – மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் முன்ஸி 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லனும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த மைக்கேல் ஜோன்ஸ் – கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 71 ரன்களை எட்டியது.
அதன்பின் 33 ரன்களை எடுத்திருந்த மைக்கேல் ஜோன்ஸ் ஆட்டமிழக்க, அரைசதத்தை நெருங்கிய ரிச்சி பெர்ரிங்டனும் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் டாம் ப்ரூஸ் 24 ரன்களையும், ஆலிவர் டேவிட்சன் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்களில் 152 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் லியாம் டௌசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 2 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ஜேக்கப் பெத்தெல் – டாம் பாண்டன் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் பெத்தெல் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹாரி ப்ரூக்கும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு வந்த சாம் கரண் தனது பங்கிற்கு 28 ரன்களை சேர்த்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் பாண்டன் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 3 சிஸர்கள் என 63 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி முதல் முறையாக ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிகொடுத்த டாம் பாண்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

