பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பங்கள் எழுந்திருந்தன.
ஏனெனில் டி20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் விலகியதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசங்காம், இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று அறிவித்தது. இந்த சர்ச்சைகள் இரண்டு வாரங்களாக நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் அணி தங்களின் முடிவிலிருந்து பின் வாங்கியது. அதனைத் தொடர்ந்தே இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுவது உறுதியானது.
இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் இலங்கை சென்றடைந்த நிலையில், தங்களின் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றனர். இதனால் இந்த போட்டியை காண ரசிகர்களும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் இஷான் கிஷன் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷான் கூறுகையில், “இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான தயாரிப்புகளை நாங்கள் ஏற்கனவே முடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இப்போது நாங்கள் பந்தை பார்த்து எங்களுடைய இயல்பான விளையாட்டை விளையாட வேண்டியது மட்டுமே அவசியம். ஏனெனில் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடிப்பது எளிதல்ல. எனவே ஒரு மோசமான ஷாட்டில் விக்கெட்டை இழப்பதற்குப் பதிலாக, நாங்கள் எங்கள் நேரத்தை எடுத்து விளையாட வேண்டும்” என்றார்.
பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு குறித்து பேசிய அவர், “சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நாம் தனியாக தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாங்கள் நாங்கள் சில வீடியோக்களைப் பார்த்து, எந்த மாதிரியான பந்துவீச்சை எதிர்கொள்ள போகிறோம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறோம். அதனால் நாங்கள் சுழற்பந்து வீச்சை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறோம்” என்றார்.
அதன்பின் தனது பேட்டிங் குறித்து பேசிய இஷான், “நான் இப்போது மாறிவிட்டேன். மேலும் எனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அதிக கவனம் செலுத்துகிறேன். அதனால் களத்தில் நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். அதனால் நான் பந்தை பார்த்து விளையாடுவதுடன், ஸ்டிரைக்கை மாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறையானது அல்ல என சிலர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். சிலர் உஸ்மான் தாரிக் பந்தை எறிவதாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். ஆனால் உஸ்மான் தாரிக் சர்வதேச கிரிக்கெட் கவுன்சின் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்துவீசுகிறார் என்று ஐசிசி தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

