ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற 16 ஈரான் போர் கப்பல்களைத் தாக்கி அளித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் தொடர்ந்து 12-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் வர்த்தகப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் அவ்வழியே சென்ற 100- க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளன.
சில நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீண்டும் திரும்பிச் சென்றாலும், இந்தியாவில் இருந்து பாசுமதி, ஆடைகள் உள்ளிட்டவற்றுடன் சென்ற கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் வணிக நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி எரிவாயுவை இந்தியா, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பெற்று வரும் சூழலில், தற்போது இந்த வழித்தட அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வரும் கப்பல்களைத் தாக்குவதற்கான ஈரானின் கண்ணிவெடி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற 16 ஈரான் போர் கப்பல்களை அமெரிக்கா துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதேபோல, தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளது. இதில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேபோல் நேற்று (மார்ச் 10) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய மருத்துவ ஆணையத்தில் பணிபுரியும் துணை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

