தமிழ்நாடு – ஆந்திரா எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து 530 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், தமிழ்நாடு – ஆந்திரா எல்லையான நல்லூர் சுங்கச் சாவடியில் கடந்த 8 ஆம் தேதி ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன் சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் சுமார் 530 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த சென்னை மண்டல மத்திய போதை பொருள் அதிகாரிகள், லாரியில் வந்த இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த கஞ்சாவை தமிழ்நாடு வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிறரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் அவர்கள் இறங்கியுள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் மதிப்பு ரூ. 2.65 கோடி எனக் கூறப்படுகிறது. நடப்பாண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சென்னை மண்டல மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுமார் 1,490.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

