சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று (மார்ச் 11) காலை வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியினர் அலுவலகத்தை திறக்க வந்தபோது அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பொருட்களும் சேதமடைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் காவல் துறைக்கும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கும் உடனே தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காரைக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தடயங்களையும் சேகரித்தனர். இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது? யார் செய்தது? என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையில், அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நேற்றிரவு இந்த பகுதிக்கு யார், யார் வந்து சென்றிருக்கிறார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையிலான நிர்வாகிகள், தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அலுவலகத்தைத் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதாகவும், தொலைபேசி மூலம் நிர்வாகிகளிடம் தகவல் கேட்டறிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களைச் சந்தித்து திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வரும் நிலையில் இந்நிகழ்வு அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

