பிரதமர் மோடி யாரைக் கண்டும் பயப்படவில்லை. ஏன் பாகிஸ்தானைக் கண்டும் பயப்படாதவர் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனின் பேச்சால், தமிழ்நாடு தலைகுனிந்து நிற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கமலஹாசன் கட்சி தொடங்கும்போதே, அவர் பேசும் மொழிக்கு கோனார் உரைதான் தேவைப்படும் என்று தெரிவித்தேன். அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார், எந்த மொழியில் பேசினார் என்பதே விளங்கவில்லை. அதே நேரத்தில் பெரியார் கூறியதைத்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஆனால், அதுகூட தெரியாமல், தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை என்று பெரியாருக்குதான் கமலஹாசன் பதில் சொல்லியுள்ளார். அதுகூட தெரியாத இங்குள்ள பெரியார் பக்தர்கள் கைதட்டி சூப்பர் என்று ரசிக்கிறார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
அதேபோல யாரும் ஆட்சி அதிகாரத்தில் அதிக நாட்கள் இருக்க முடியாது என கமலஹாசன் கூறுகிறார். அவர் யாரை கூறுகிறார்? 2026 சட்டமன்றத் தேர்தல் இங்குதான் நடைபெற உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக மன்னிக்க முடியாத பல தவறுகளை செய்வார்கள், அதிலும் கமலஹாசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது திமுக செய்த மிகப்பெரிய தவறு. சினிமாவில் டயலாக் பேசிக்கொண்டிருந்தவர், தற்போது நாடாளுமன்றத்தில் என்னவென்றே தெரியாமல், தவறாக டயலாக்குகளை பேசிக் கொண்டிருக்கிறார். இதனால், தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி யாரைக் கண்டும் பயப்படவில்லை. ஏன் பாகிஸ்தானைக் கண்டும் பயப்படாதவர் என்றும், எதிர்க்கட்சிகளுடைய நடவடிக்கை மனதிற்கு வேதனையாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய சபாநாயகர், இங்கு இருக்கக்கூடிய அண்ணன் அப்பாவுபோல் இல்லை. எதுவாக இருந்தாலும் தெள்ளத் தெளிவாகப் பார்த்து கூறக்கூடியவர். ஆனால், இங்கு இருக்கக்கூடிய அண்ணன் அப்பாவு ஆளுநர் வரும்போது மைக்கை ஆப் செய்பவர். அப்படிப்பட்டவர் அல்ல நாடாளுமன்றத்தில் இருக்கும் சபாநாயகர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா ஐரோப்பா ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய ராஜதந்திரமான விஷயத்தை பிரதமர் மோடி செய்திருக்கிறார். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு தந்திரம் மட்டுமே செய்யத் தெரியும் என சாடியுள்ளார். பிரதமரையே மிரட்டும் அளவிற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டது மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரியைப் பொறுத்தவரை நேரடியாக மத்திய அரசு விதிப்பது கிடையாது. இங்கு இருக்கக்கூடிய மாநில அரசு கொடுக்கக்கூடிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

