12 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை (மே 5) தொடங்க உள்ளது. இதனால், தேர்வுத்துறை தேர்வெழுதும் மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு பருவத்தேர்வுகள்
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, நாளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
தேர்வுத்துறையின் எச்சரிக்கை
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறையில் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த தகவல்களையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது.
- தேர்வறையில் புத்தகங்கள் , கையேடுகள், கையெழுத்து பிரதிகள் ஆகியவற்றை வைத்திருக்கும் மாணவர்கள் அன்றைக்கான தேர்வு மற்றும் அடுத்து பருவ தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்.
- மற்ற மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினால் சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இத்தகைய செயலில் ஈடுபடும் மாணவர்கள் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான பருவத்தேர்வை எழுத தடை விதிக்கப்படும்.
- தேர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை தொடர்பு கொண்டு உதவி பெற முயற்சித்தால் அந்த பருவ தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- தேர்வெழுதும் தேர்வர் ஆள்மாறாட்ட செயல்களில் ஈடுபட்டால், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
- விடைத்தாளில் தேவையற்றதை எழுதினாலோ அல்லது மதிப்பெண் வழங்குமாறு கடிதம் எழுதினாலோ குறிப்பிட்ட பாடத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- தேர்வு அறையில் உள்ள கண்காணிப்பாளர்களை திட்டுதல், தாக்குதல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால் தேர்வறையை விட்டு வெளியேற்றப்படுவதுடன் மற்ற தேர்வுகளை எழுதவும் தடை விதிக்கப்படும் அல்லது தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
- விடைத்தாளை வெளியில் எடுத்து செல்வது அல்லது விடைத்தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் செல்வது, விடைத்தாளை கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் எச்சரிக்கப்பட்டு , அந்த தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- விடைத்தாளில் ஏதேனும் சிறப்பு குறியீடுகள் எழுதப்பட்டிருந்தால் மாணவரிடம் விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்படும் அல்லது அந்த தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
- கேள்வித்தாளில் விடை எழுதி அதனை மற்ற மாணவர்களுக்கு வழங்கினால் அந்த பாடத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.பொதுத்தேர்வு குறித்து இவ்வாறான அறிவுறுத்தல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது .