ரஷ்யா – உக்ரைன் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. முன்னேறி வரும் ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சும் உக்ரைன் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படி ஒரு குழந்தையின் முதுகில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களின் புகைப்படத்தை தனது வலை பக்கத்தில் பகிர்ந்துள்ள பத்திரிகையாளர் ஒருவர், போர் உக்ரைனை இவ்வளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.ஆனால் ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வரத்தை குறித்து கவலை படுகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை சிறுமியின் தாய் சாஷா மகோவி மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் “எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் கூட யாராவது அவளை காப்பாற்றுவார்கள்” என்று இந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
உக்ரைனில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போர் குறித்து கடந்த வாரம், தி கார்டியன் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது, அதில் குழந்தைகள் ரஷ்யப் படைகளால் “மனித கேடயங்களாக” தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது பயன்படுத்தப்படுவதாக கூறியது.
இந்த புகைப்படங்கள் போரின் கொடூரமான யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகின்றன. எப்பொழுது ஒரு போர் குழந்தைகளின் உயிரைக் குடிக்கிறதோ, அப்பொழுது அது இனப்படுகொலை ஆகிறது.