எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் புவனேஸ்வரி (29). கடந்த 2016 ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்த இவர், ஆவடி பெட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். புவனேஸ்வரி தற்போது அயல் பணியாக எழும்பூர் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர், மற்றொரு காவலரான சிலம்பரசன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2024 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணமான நாளிலிருந்தே, சிலம்பரசன் தன் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு தினமும் மது அருந்தி விட்டு வந்து அடித்து சித்திரவதை செய்துவந்தாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு (பிப் 12) வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சிலம்பரசன், தன் மனைவி புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டாராம். பின்னர் சிலம்பரசன் உறங்க சென்றுள்ளார். இதையடுத்து, கடும் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, தனது உயிரை மாயத்துக் கொண்டார்.
சிலம்பரசன் நள்ளரிவில் எழுந்து வந்து பார்த்தபோது, மனைவி புவனேஸ்வரி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் எழும்பூர் போலீசார் விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், திருமணத்திற்கு முன்பு புவனேஸ்வரி திருவண்ணாமலையை சேர்ந்த நண்பர் ஒருவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் கணவர் சிலம்பரசனுக்கு இந்த விஷயம் தெரிய வர, பணத்தை திரும்ப வாங்குமாறு புவனேஸ்வரியை வற்புறுத்தி வந்திருக்கிறார். மேலும், திருமணம் ஆன நாள் முதலே புவனேஸ்வரி மீது சிலம்பரசனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் தொடர்ச்சியாக தகராறு வந்ததாகவும், அவருடைய பெற்றோரிடமும் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இந்த முடிவை புவனேஸ்வரி எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புவனேஸ்வரியை கணவன் சிலம்பரசன்தான் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் சிலம்பரசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

