வாங்கிய கருவாட்டுக்கு பணம் தராமல் சப் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “பாம்பன் காவல் நிலையம் எதிரே பல வருடங்களாக கருவாட்டு கடை வைத்து நடத்தி வருகிறோம். கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பாம்பன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் என்பவர், எங்கள் கடைக்கு வந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவாடுகளை வாங்கினார். பணம் கேட்டதற்கு பின்பு தருவதாக கூறி சென்றுவிட்டார்.
இதேபோல் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி மீண்டும் வந்து கருவாடு கேட்ட போது, எனது சகோதரர் பணம் இல்லாமல் கருவாடு தர முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், எனது தம்பியை ஆபாச வார்த்தைகளில் திட்டி உங்கள் அனைவரது மீதும் கஞ்சா வழக்கு போட்டு உள்ளே அனுப்புகிறேன் பார் என கூறி காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, சார்பு ஆய்வாளர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆதம் அலி ஆஜராகி, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கருவாட்டு கடைக்கு வந்து பணம் தராமல் கருவாடு வாங்கி சென்றதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கை வேறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. காவல்துறையினர் ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், பொய்யான குற்றச்சாட்டு என்றால், மனுதாரர் இத்தனை மனுக்களை அனுப்பி, வழக்கும் தொடர்ந்திருக்க மாட்டார். மேலும் சிசிடிவி ஆதாரங்களும் உள்ளதால், மனுதாரரின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது, பணம் கொடுக்காமல் ஒரு பொருளை எவ்வாறு வாங்க முடியும்?
எனவே, சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டு உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், நடைபாதை கடைகளுக்கு முறையான உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

