தேனி மாவட்டம் போடியிலிருந்து நேற்று காலை மதுரை நோக்கி தனியார் பேருந்து 50-க் கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பகல் 12 மணியளவில் ஆண்டிபட்டியைக் கடந்து டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே பேருந்து சென்றது.
அப்போது, திருமங்கலத்தில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வடுகபட்டி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்து திசைமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தின் பெரும்பகுதி சேதமடைந்த நிலையில், உள்ளே இருந்த பயணிகள் அலறினர். அருகில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.
காயமடைந்த பேருந்து பயணிகள் 37 பேர், காரில் வந்த 4 பேர் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலத்த காயமடைந்த அல்லி நகரம் அசோக்குமார் (40), விருதுநகர் கணேஷ்ராம் (49), பண்ணைப்பட்டி போஸ் (30), மேல்மங்கலம் ராமையா (79), ஸ்ரீரங்கபுரம் கணேசன் (62), உத்தமபாளையம் சுபாஷினி (26) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

