காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31-ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி மது பாட்டில்கள் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த, சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 29 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, ஒரு மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மது பாட்டில்களில் கியூ.ஆர்.கோடு அச்சிடுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு பணியாளர்களின் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முழுமையாக அமல்படுத்த இயலவில்லை. தற்போது 29 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் அமல்படுத்த கடைசி வாய்ப்பாக மே மாதம் இறுதி வரை அவகாசம் வழங்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது.
ஒரு மாதம் அவகாசம் வழங்கியும், மீதமுள்ள மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்சினை? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தினமும் 2 கோடி மது பாட்டில்கள் விற்கப்படுவதை சுட்டிக் காட்டி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31 ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், திட்டத்தை அமல்படுத்தத் தவறினால், அதன் பின் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் வீதம் சுற்றுசூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தனர்.
மேலும் காலி மது பாட்டில்களை சேகரிக்கும் போது, மூட்டை மூட்டையாக கட்டிப் போடுவதால், அவற்றில் சில உடைந்து சேதமாவதாக கூறிய நீதிபதிகள், காலி பாட்டிகளை முறையாக கையாளும்படி உரிய அறிவுறுத்தல்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

