‘நாங்கள் நிச்சயதார்த்தம் செஞ்சுட்டோம். நீங்கதான் நல்லபடியா கல்யாணம் செஞ்சுவெக்கணும்’ என சட்ட பேரவையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ பேசியது ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் சிரிப்பலை
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, ‘கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிப் பள்ளி அமைக்க நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துவிட்டோம், திருமணம் நடைபெற வேண்டியதுதான் பாக்கி. அரசு திருமணத்தை நல்லபடியாக நடத்தித்தருமா?’ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பேசிய சபாநாயகர் அப்பாவு.“பெண் பார்த்திருக்காங்க” என்று கேலி செய்தார்.
அமைச்சரின் பதில்
இதனையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘கோவில்பட்டியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் கூடிய அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் ஏற்கெனவே ஓர் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. எனினும், கோவில்பட்டியில் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி வேண்டும் என உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது.
“பெண் பார்க்கும் சூழ்நிலை மட்டும்தான் தொடங்கியிருக்கிறது, இருந்தாலும்கூட இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடத்தி வைக்கப்படும்” என்று எதிர்க்கட்சி கேள்விக்கு நய்யாண்டியாக பதிலளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.