நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
வள்ளுவனின் இந்த குறள் ஒன்றே போதும் தண்ணீர் நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள. கால்நடை வளர்ப்பாக இருந்தாலும் சரி, கட்டுமான வேலைகளாக இருந்தாலும் சரி, தண்ணீரின் பயன்பாடு இல்லாமல் எந்த தொழிலும் இயங்காது என்பது உலகறிந்த உண்மை. ஐந்து பூதங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பது இயற்கைக்கு எதிரான செயல் என்றே கருத வேண்டும்.
தொழில் புரட்சி உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம், அதுவரைக்கும் ஆறுகள்,ஏரிகள் என அனைத்தும் பொதுவான சொத்துக்களாக கருதப்பட்டு வந்தன. இன்று முன்னேறிய நாடுகள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாடுகளின் உற்பத்தி திறன் அதிகரித்து, ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகள் கிடைத்த பின்னர், இப்படி பொதுவாக இருந்த நீர்நிலைகள் யாவும் அரசுடமையாக்கப்பட்டு மெல்ல மெல்ல தனியார்மயமாக்கப்பட்டு தண்ணீருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் தொழிற்சாலைகளுக்கு என்று பிரத்யேகமாக விநியோகிக்கப்பட்டு வந்த நீருக்கு மட்டுமே விலை இருந்த நிலையில், காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் அன்றாடம் குடிக்கும் குடிநீருக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
உலகின் எல்லா நாகரிகங்களும் ஆற்றங்கரையோரத்தில் தொடங்கியது. நீரை மையமாக கொண்டு தான் மனித நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தன.நாகரிகம் அடைந்த பின்னர், மனிதன் செய்த முதல் தொழில் உழவு தான்.உழவு தொழிலில் பல முன்னேற்றங்கள் வந்த பின்னர், குறைந்த அளவு நீரில் அதிகமான விளைச்சலை பெரும் தொழில்நுட்பங்களும் வளர்ந்தன. அதனால் விவசாயத்திற்கு அதிக அளவு நீரை பயன்படுத்தும் பழக்கமும் மெல்ல குறைந்தது. உலகமயமாக்கலின் விளைவாக வாகனங்களின் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்தது. இதனால் மேலும் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்தது. நீர் ஒரு சந்தைப்பொருள் ஆனதற்கு பிறகு, குடிநீரை சுற்றியே ஒரு பெரிய வணிக உலகம் உருவானது.
கச்சா எண்ணெய், தங்கம், பணமதிப்பு என்ற வரிசையில் தண்ணீரும் ஒரு பொருளாதார காரணியாகவே பார்க்கப்பட்டது. மறை நீர் எனப்படும் Virtual Water அளவை பொறுத்தே ஒரு நாட்டின் வர்த்தக கட்டமைப்பு முடிவு செய்யப்படுகிறது. வருங்காலங்களில் ஒரு நாட்டில் உள்ள நீர்நிலைகளின் அளவும், அந்த நாட்டின் மொத்த நீர் கொள்ளளவும் தான் அந்த நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும். எனவே வருங்காலங்களில் உலக வர்த்தகத்தில் நீரின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.