சினிமா

இப்போதும் விஜயகாந்த் சிங்கம்தான்.. மகனுக்கு கேக் ஊட்டிய புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட மாபெரும் நடிகர்.

உச்சநட்சத்திரமாக இருந்தபோதே தான் சம்பாதிக்கும் பணத்தை மக்கள் நலனுக்காகத்தான் செலவிடுவேன் என்று கூறி, சொன்னபடியே பின்னாட்களில் மக்களுக்காக அரசியலில் களம்கண்டவர். விஜயகாந்த் கட்சி தொடக்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் விஜயகாந்தை சிங்கம் என்று வர்ணித்தனர். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நாயகன் ஆனார் விஜயகாந்த். மக்கள் அவருக்கு கொடுத்த ஆதரவின் காரணமாக பின்னாட்களில் எதிக்கட்சி தலைவராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, சினிமா, அரசியல் என இரண்டு வெவ்வேறு துறைகளில் சாதித்த விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய பிரபாகரன் அப்பாவிற்கு துணையாக அரசியலில் பயணிக்கிறார். இளைய மகன் சண்முகபாண்டியன் அப்பாவைப் போலவே திரைத்துறையில் தடம்பதிக்க முயன்று வருகிறார். சண்முகப்பாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து வெளியான ‘மதுரவீரன்’ திரைப்படம் சண்முகப்பாண்டியனுக்கு ரசிகர்களிடம் நல்மதிப்பை பெற்றுத்தந்தது.

விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் விரைவில் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்தபோது இதற்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செயல் அரசியலில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்த் தற்போது அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். இந்த நிலையில் இளைய மகன் சண்முகப்பாண்டியனின் பிறந்தநாளை எளிமையான முறையில் மனைவி பிரேமலதா, மூத்த மகன் விஜயபிரபாகரனுடன் கொண்டாடியுள்ளார். அந்த போட்டோக்களை தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

Related posts