புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உடன் தொகுதி பங்கீடு இதுவரை இறுதியாகாத நிலையில் புதுச்சேரியில் விசிக 3 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுப்பறி ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து தற்போது புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிட விசிக முடிவு செய்துள்ளது. அதன்படி ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளனர். தாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசிகவுக்கு இதுவரை எந்த தொகுதி என்பதே தெரியாத நிலையில் நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலில் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் திமுக தரப்பில் ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்தாலும் எந்த தொகுதி என உறுதியாகவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

