Editor's Picksதமிழ்நாடு

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து ; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டினை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. அதே சமயம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மற்ற பிரிவினர் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டினை தீவிரமாக எதிர்த்தனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தினை எட்டிய போது, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டினை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதே சமயம், மேற்கண்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு செல்லும். உள் இட ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும் என தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது.  சென்னை ஐகோர்ட்டின்  தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.