சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை பகல் நேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடுவதற்கு தெற்கு ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர்.
ராமேஸ்வரம் என்றால் பாம்பன் பாலம் தான் நினைவிற்கு வருகிறது. 110 ஆண்டுகால கட்டமைப்பிற்கு மாற்றாக புதிய பாலம் கடந்த ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதையடுத்து ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையிலான 53 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார மயமாக்கும் பணிகள் நடைபெற்றன. இவை முழுமை பெற்றதும் முதல் ரயிலாக ராமேஸ்வரம் – ஓகா எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வந்தது.
இத்தகைய ரயில் பாதை கட்டமைப்பில் சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எதில் பயணிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு நகரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்குவதற்கு வாய்ப்புள்ளது.
தற்போது இரவு நேரத்தில் மட்டும் தினசரி ரயில் சேவை கிடைத்து வருகிறது. இதனால் அதிகப்படியான பயணிகள் வருகையால் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

