அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சிலிண்டர் தட்டுப்பாடு, தமிழகத்துக்கான நிதியை வழங்கவில்லை எனக்கூறி மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான். அமெரிக்காவைச் சேர்ந்த ஜனநாயகவாதிகள் ஒன்று சேர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கற்பையும், மானத்தையும் உயிரினும் பெரிதாக மதிக்கும் தமிழகத்தில், எப்படியும் வாழ்க்கை நடத்துவேன், யாரோடும் செல்வேன், யாரோடும் கரம் கோப்பேன், யாரோடும் மேடைக்கு வந்து நிற்பேன் எனச் சொல்லும் அபாயம் நேர்ந்திருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம். தமிழகத்தின் மானம், மரியாதை, பெருமை, உரிமைகளைக் காக்க வேண்டும்.
மத்திய பாஜக ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தேவையான நிதி கொடுப்பதில்லை. போதிய திட்டங்களை கொண்டு வருவதில்லை. சொற்ப நிதியைக் கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அவரே தொடர்ந்து முதல்வராக வருவதற்கு திமுக கூட்டணியை ஆதரியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். ஒரு நடிகையுடன் தவெக தலைவர் விஜய்க்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே, விவகாரத்து கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ‘அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்’ என்று வைகோ பேசியதாக கருதப்படுகிறது.

