அரசியல்தமிழ்நாடு

பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் – அமைச்சர் பொன்முடி!

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும். அதற்காகவே சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சட்ட முன்வடிவுகளைத் தாக்கல் செய்து அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:

பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தை முதல்வரே வழி மொழிந்துள்ளார். அதிமுக, பாஜக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்தக் காரணத்தைக் கூறி வெளிநடப்பு செய்தால் சரியாக இருக்காது என்பதால், வேறு காரணத்தைக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். கட்சியின்பெயரில் அண்ணாவை வைத்துள்ள அதிமுக, மாநில உரிமையைப் பாதுகாக்க துணை நிற்காமல் வெளிநடப்பு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சுரப்பா நியமிக்க பட்டபோது, அதை நாம் எதிர்த்தோம். அதையும் மீறி அவர் நியமிக்கப்பட்டதால்தான் இந்த சட்டத்திருத்த முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அரசு பரிந்துரைப்பவரையே துணைவேந்தராக நியமிக்கும் வகையில் சட்டம் உள்ளது. பிரதமர் மோடி முதல்வராக இருந்த குஜராத்திலும், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியும், அவர் நியமிக்காததால், பல்கலைக்கழக சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, அம்மாநில முதல்வரே துணைவேந்தரை நியமித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், மாநில அரசுகளுக்குப் பிரச்சினையாக உள்ளது. இதற்குத் தீர்வுகாணவே இந்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சுரப்பா பொறுப்பு வகித்தபோது, அதிமுகவினர் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதற்காக கமிஷன் போடப்பட்டதும் தெரியும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதைக்கூட கேட்காமல், மாநில கல்விக் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். புதிய கல்விக் கொள்கையை எப்படியாவது திணிக்க வேண்டும் என்ற உணர்வுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருக்கக் கூடாதா?

மாநிலத்தின் ஆளுநர், மத்திய அரசால் நியமிக்கப்படுபவர். ஆனால், முதல்வரோ மக்களால் தேர்வு செய்யப்படுபவர். எனவே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநிலஅரசுக்கு வேண்டும். இந்த அதிகாரம், மருத்துவம், வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட வேண்டும்.

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும். முதல்வரின் ஆலோசனை அடிப்படையில்தான் அவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான் சட்ட முன்வடிவு கொண்டு வரப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

Related posts