முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் 2ம் திருவிழாவில் இருந்து 5ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கு சுவாமி அம்பாளுக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
6ம் திருவிழாவான நாளை மறுநாள் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனை நடக்கிறது.
மதியம் 2 மணிக்கு சுவாமியும் அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளு கிறார்.
அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார்.
அங்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.
சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரையில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரபத்மனை வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் நடைபெறுவதற்கு நீண்ட தூரம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நான்கு கட்டங்களாக முதலில் யானை முகம் இரண்டாவது சிங்கமும் மூன்றாவது தன்முகம்(சூரன்), இறுதியில் சேவலாக மாறும் சூரனை வதம் செய்யும் வகையில் தனித்தனி கட்டங்களாக சுவாமி ஜெயந்தி நாதர் சூரனை சுற்றி வந்து வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்புகளுக்கு வெளியே இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
7ம் திருவிழாவான 28ம் தேதி மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார்.
பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன் இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

