சமூக வலையதள நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கைபற்றியுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், “ஊழியர்களிடம் ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டருக்கு இனி இருண்டகாலம். அடுத்தது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என பரபரப்பான கருத்தினை தெரிவித்துள்ளார்.
பராக் அகர்வாலின் இந்த கருத்து ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிறுவனம் எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை என அகர்வால் கவலை தெரிவித்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால், திங்கட்கிழமையன்று ஊழியர்களுடனான சந்திப்பின்போது ட்விட்டர் நிறுவனம், எலான் மஸ்கின் 44 பில்லியன் டாலர் மதிப்பினாலான கையகப்படுத்தலை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம் என்று தான் மதிப்பிட்டுள்ளதாக அகர்வால் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்பட்ட பராக் அகர்வால் ட்விட்டரின் CEO வாக இயங்குவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த கையகப்படுத்தலை அடுத்து பணி நீக்கம் இருக்குமா? என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது குறித்த நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது.
இந்த ஒப்பந்தம் முடிவடையும் வரையில் அகர்வால் பொறுப்பில் இருப்பார் என்றும் தெரிகிறது. எனினும் அதன் பிறகு நிறுவனத்தினை யார் வழி நடத்த போகிறார்கள்? யாரை தேர்வு செய்வார்கள்? இதனை தொடர்ந்து வழி நடத்துவதில் மஸ்க் எவ்வளவு ஆர்வம் காட்டப் போகிறார் என தெரியவில்லை.
எனினும் ட்விட்டர் ஊழியர்களுடன் விரைவில் எலான் மஸ்க் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.