அரசியல்தமிழ்நாடு

“புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும்” – ஆளுநர் ஆர்.என். ரவி!

நீலகிரி மாவட்டம் உதகை:  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் 31 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நேற்று தொடக்கி நடைபெற்று வருகிறது.

இதில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார், அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். உதகையில் உள்ள ராஜ்பவனில், துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த பின் பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி, பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல் படுத்தவேண்டும் என கூறினார். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தளத்தில் பட்டப் படிப்புகள் படிக்க பல்கலைக்கழகங்கள் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும், புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்க உதவும் எனவும் தெரிவித்தார். அனைத்து நாடுகளும் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இச்சூழலில் இந்தியா முன்னேற்றம் அடைய கல்வி முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. கல்வி சமுதாய முன்னேற்றத்திற்காக பயன்பெறும் வகையில் வளர்ச்சி அடைய வேண்டும்.

காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாடு பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு வலியுறுத்தினார்.

இதனை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இந்தியா பிற நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்று தனது உரையை முடித்தார். துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

 

Related posts