சென்னை: சென்னை வேளச்சேரியில் வளர்ப்பு நாய்களுக்கான DOG Show ஒன்று நடைபெற்றது. இதில் பல ரக விதமான நாய்கள் பெரும் அளவில் பங்கேற்றன.
The Great Indian Dog Show
கடந்த 24.04.2022 மாலை 4 மணியளவில் சென்னை வேளச்சேரியில் உள்ள Phoenix மாலில் வளர்ப்பு பிராணியானா நாய்களுக்கான DOG Show ஒன்று நடைபெற்றது. இதில் பல ரக விதமான நாய்கள் பெரும் அளவில் பங்கேற்றன.
இந்த டாக் ஷோவில் 100 மேற்பட்ட நாய்கள் மேடையில் வலம் வந்தனர். அப்போது தங்களின் உரிமையாளர்கள் சொன்ன அனைத்து கட்டளைகளுக்கு ஏற்றவாறு செயல்பட்டனர். அதிலும் சிலர் கொடுத்த கட்டளைகளும் அதற்கு நாய்கள் செய்த பாவனைகளும் பார்க்கவே மிகவும் வியப்பளித்தது.
தமிழிலேயே பெயர்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் நாய்கள் மேடையில் இருக்கும்போது அவர்களும் மேடைகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கும் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கும் இருக்கும் பிணைப்பையும் அன்பையும் பற்றி கூறினார்கள்.
அதில் ஒருவர் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் அனைவருக்குமே தமிழில் தான் பெயர் வைத்துள்ளோம். அதேபோல் எங்கள் நாய்க்கும் தமிழில் தான் பெயர் வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார். இதை கேட்டு மொத்த கூட்டமும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
ஆண் – பெண் பாகுபாடு
நிகழ்ச்சியில் பேசிய இன்னொருவர், ‘ஆண் பெண் பாகுபாடு பார்க்கும் பழக்கம் நம்மில் தொடங்கி நாய்கள் வரை வந்து விட்டதை நினைத்தால் மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும். பெரும்பாலும் நம்மில் பலர் பெண் நாய்களை வளர்ப்பதில் தயக்கம் காட்டுகிறோம்.
அதை நாம் மாத்திக்கொள்ள வேண்டும். இன்று மேடையில் இத்தனை நாய்களுடன் போட்டிபோட்ட என்னுடைய நாய் ஒரு பெண் என்பதை மிகுந்த கர்வத்துடன் சொல்லிக்கொள்கிறேன். அதனால் பாகுபாடின்றி எல்லா நாய்களையும் சரிசமமாக பார்க்கவேண்டும்’ என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் விசில் அடித்து அந்த நாய் உரிமையாளரை பாராட்டினர்.
‘ராக்கி பாய்’
டாக் ஷோவில் கலந்து கொண்ட ஒரு நாய்க்கு கேஜிஃப் படத்தின் மூலம் பிரபலமான ‘ராக்கி பாய்’ என்ற பெயரை தான் வைத்துள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘இந்த நாய்க்கும் ராக்கி பாய் போல கோவம் வருமா’ என்று கேட்டதற்கு, அதன் உரிமையாளர், ‘ஆம் இவன் வழியில் யாரவது குறுக்கிட்டால் அவன் ராக்கி பாய் போல மாறிவிடுவான்’ என்றார்.
நாய்க்குட்டிகள் விற்பனை
இந்த நிகழ்ச்சியில் நடந்த மேடைக்கருகில் ப்ளூ கிராஸ் ஆப் இந்தியா சார்பாக பல விதமான நாய் குட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அந்த நாய்குட்டிகளை பெரும்பாலானோர் வாங்கி சென்றனர். அனைத்து நாய்குட்டிகளும் கால்நடை மருத்துவர் பரிசோதித்த பின்னரே வாடிக்கையாளர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.