பொற்கோவில் என்றவுடன் பஞ்சாபில் இருக்கும் சீக்கியரின் வழிப்பாட்டுத்தலமான பொற்கோவில் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் நம் தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது.
முழுக்க தங்கத்தால் ஆன “தங்க கோவில்” கோவில் தான் வேலூர் மாவட்டம் “ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி கோவில்”. இக்கோவிலை பற்றி இங்கு சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபுரம் என்ற இந்த பகுதியில் சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகவும், அப்போது அச்சிலையை சுற்றி ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் இத்தல வரலாறை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாராயணி உபாசகர் ஒருவர், நாராயணி தேவிக்கு தங்கத்தால் ஆன கோவிலை கட்டும் விருப்பம் மேலிட்டு அவரது முயற்சியால் “15000 கிலோ தங்கத்தை” பயன்படுத்தி கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கோவிலின் விஷேஷ அம்சமாக கோவிலின் தெய்வமாக “நாராயணி தேவி” சுயம்புவாக இருப்பதாகும். இந்த கோவிலின் அனைத்து பகுதிகளுமே முழுக்க சுத்த தங்கத்தால் ஆன முலாம் மற்றும் தகடுகள் பொருத்தி செய்யப்பட்டதாகும்.
இந்த தங்க கோவிலின் வெளிப்பிரகாரம் வானிலிருந்து பார்க்கும் போது பெருமாளின் “சுதர்சன” சக்கரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 கிலோமீட்டர் அளவு கொண்ட இந்த பிரகாரத்தை பக்தர்கள் சுற்றிவந்து இக்கோவிலின் மைய மண்டபத்தில் நுழையும் முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்படி வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு 16 பேறுகளை நாராயணி தாயார் வழங்குவதாக கருதப்படுகிறது. வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.