பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா? என்ற கேள்விக்கு ’24 மணி நேரம் காத்திருங்கள்’ என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறவுள்ள 27ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவார்களா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் கடந்த முறை இவ்விரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோதிய நிலையில், கைகுலுக்குவதை தவிர்த்திருந்தனர்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா? என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘போட்டிக்கான டாஸ் போடும்போது அதைப் பற்றிப் பார்க்கலாம், அதனால் 24 மணி நேரம் காத்திருங்கள்’ என்று பதிலளித்தார்.
இந்தியாவின் வலுவான லெவன் அணியை எதிர்கொள்ள விருப்புவதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிளித்த சூர்யகுமார், “அபிஷேக் சர்மா தற்சமயம் முழு உடற்தகுதியுடன் உள்ளார். அவர்கள் அவரை எதிர்கொள்ள விரும்பினால், நாங்கள் நிச்சயம் அவரை விளையாட வைப்போம்” என்றார். இதன் மூலம் நாளைய பிளேயிங் லெவனில் அபிஷேக் சர்மா இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து பேசிய சூர்யா, “நாங்கள் இலங்கையில் நிறைய இருதரப்புப் போட்டிகளில் விளையாடியுள்ளோம். எனவே இந்த நிலைமைகள் எங்களுக்கு நன்கு அறிந்தவைதான். அதேசமயம் நாங்கள் பாகிஸ்தானுடன் அடிக்கடி விளையாடுவது கிடையாது. அதனால் நாங்கள் இந்த போட்டியை எளிமையாக வைத்திருக்க முயற்சிப்பதுடன், எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கிரிக்கெட்டை நாம் எப்போதும் அதன் மாண்புடன் விளையாட வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதனால் இதுகுறித்த முடிவு அவர்களிடம் தான் உள்ளது” என்றார்.

