ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
மெல்போர்னில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கான்பெர்ராவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி T20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி சமன் செய்து ஆறுதல் தேடிக்கொள்ள எல்லா வகையிலும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
பொதுவாக பிரிஸ்பேன் மைதானம் பவுன்சும் வேகமும் நிறைந்தது. அதனால் முந்தைய ஆட்டங்களை போல் சுழலின் தாக்கம் இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் கணித்து ஆடினால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்க்கலாம். பிரிஸ்பேனில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும்.

