இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள் என வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இணையவழி தகவல் பரிமாற்றத்திற்கு பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ் ஆப் தனியுரிமை கொள்கையின் மூலம் பயனாளர்களின் தகவல்கள், பேஸ்புக் உள்ளிட்ட அதன் இணை நிறுவனங்களின் சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைக்கு உதவிடும் வகையில் மெட்டா நிறுவனம் செயல்பட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றஞ்சாட்டியிருந்தது.
இதனால், மற்ற சமூக வலைதளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுவதாக கூறி ரூ.213.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் தகவல்கள் பரிமாறப்படுவதை மெட்டா நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையே இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகுமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய குமார், “வாட்ஸ் ஆப் புதிய விதிகளில் நுகர்வோரின் தனிப்பட்ட தரவை பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கான உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்? தகவல் தொழில்நுட்ப அறிவு இல்லாத ஏழை மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உங்களின் சிக்கலான கொள்கைகளை எப்படி புரிந்து கொள்வார்கள்? எந்த வகையிலும் இந்திய மக்களின் தகவல் திருடப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது” என்றார்.
தொடர்ந்து அவர், “தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமை கொள்கையுடன் வேறு ஒருவரை விளையாட அனுமதிக்க முடியாது. எங்களின் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள உங்களை அனுமதிக்க முடியாது. எங்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றாவிட்டால் இந்தியாவில் இருந்து உங்கள் நிறுவனங்கள் வெளியேறலாம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து மெட்டா தரப்பில், தகவல்கள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டவை என்றும், பயனர்களின் தகவல்கள் எவ்விதத்திலும், யாருக்கும் பகிரப்படாது என்வும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

