பத்து கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து லைக்கா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைக்கா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் நடிகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 21 கோடி ரூபாயில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பாக செலுத்த வேண்டும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி 10 கோடி ரூபாயை வைப்பாக செலுத்த 6 வார கால அவகாசம் வழங்கக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், நடிகர் விஷாலுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் 10 கோடி ரூபாய் பணத்தை செலுத்துவதற்கு 6 வார கால வழங்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

