மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக துபாய் விமான நிலையத்தில் சிக்கி இருந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நாடு திரும்பினார்.
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அந்த வகையில் மறு அறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையமும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக துபாய் விமான நிலையம் சென்ற லட்சக்கணக்கான பயணிகள் இந்த அறிவிப்பு காரணமாக அவதிக்குள்ளாகியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இங்கிலாந்து செல்ல இருந்தார். அதற்காக அவர் பர்மிங்ஹாம் செல்வதற்காக துபாய் விமான நிலையம் சென்ற நிலையில், இந்த அறிவிப்பு காரணமாக அவர் விமான நிலையத்திலேயே சிக்கினார்.
மேலும், “இங்கு நடக்கும் விஷயங்களை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. ஏனெனில் தலைக்கு மேல் ஏவுகணைகள் செல்லும் சத்தத்தைக் கேட்பதும், இங்குள்ள நிலைமைகள் மோசமடைந்ததுள்ளதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் நானும் எனது குழுவினரும் தற்போது துபாயில் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பி.வி. சிந்து பதிவிட்டிருந்தார்.
இதன் காரணமாக அவர் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதும் சந்தேகமானது. இந்நிலையில் தான் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று நாட்களாகச் சிக்கியிருந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இன்று பத்திரமாக நாடு திரும்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மீண்டும் பெங்களூரு வந்து விட்டேன், பாதுகாப்பாக இருக்கிறேன். கடந்த சில நாள்கள் மிகவும் தீவிரமாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருந்தன. ஆனால் நான் இப்போது தாயகம் திரும்பியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எனக்கு உதவிய துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இந்திய தூதரகத்தினர் ஆகியோருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்தில் இன்று (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் தொடரில் பி.வி.சிந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அதே சமயம் மற்ற இந்திய வீரர்களான லக்ஷ்ய சென், சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி, மற்றும் தெரசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் ஆல் இங்கிலாந்து தொடரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

