சினிமா

விஜய் சேதுபதியை ஓப்பனாக பாராட்டும் அமைச்சர்..பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என புகழாரம்!

துணை நடிகராக இருந்து தமிழ் சினிமாவின் தவிக்கமுடியாத நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் திரைப்படங்களில் தொடர்ந்து வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதோடு, மக்களின் பிரச்சனைகளை பேசும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் விஜய் சேதுபதிக்கு என்று தனித்துவமான இடம் இருக்கிறது.

மக்கள் செல்வன்

ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, மக்களுக்கென்று ஒரு பிரச்சனை வரும்போது அதையும் மக்களின் செல்வனாகவே இருந்து மக்களுக்கு ஆதரவாக வெளிப்படையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி ஒதுங்கிமட்டும் நிற்கவே கூடாது. அரசியலில் நமக்குப் பிடிக்காதவர்களை ஒதுக்கி வைப்பதற்காகவாவது தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்று தேர்தலின்போது விஜய் சேதுபதி கூறியிருந்தார் .

கூடைப்பந்து போட்டி

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்கின்றன. இந்த போட்டியை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார்.

அமைச்சரின் பாராட்டு

போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “ஒரு பொது தொழிலில் இருந்து கொண்டு, தெளிவான கருத்தை தைரியமாக சொல்லி, அரசாங்கம் யாராக இருந்தாலும் தனது கருத்துக்களை வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பேசக்கூடியவர் விஜய் சேதுபதி. அவர் ஒரு தனித்துவமான நடிகர். விஜய் சேதுபதிக்கு இருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவர்” என்று கூறினார்.

 

Related posts