அரசியலில் இருந்து தன்னை ஒழித்துக் கட்டும் நோக்கில் அன்புமணி தரப்பு செயல்படுவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, “ஒரு கூட்டம் பொய், புரட்டு அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டத்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டோம். அடிப்படை பதவியில் இருந்து தூக்கிவிட்டோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து எனது மனம் புண்படும்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா.. கட்சிக்காக 26 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்த ஜி.கே. மணியையும் வசைபாடி வருகின்றனர்.
என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள். ஆனால், உயர் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக 2 முறை தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சிலரை அக்கும்பல் தன் வசப்படுத்தியதால், அவர்களுக்காக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்ய வேண்டிய வழக்கை, தேர்தல் ஆணையம் செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வது அம்பலமாகிறது. தேர்தல் ஆணையம் சரியாக திசையில் செல்லவில்லை. ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளியிட வேண்டும். கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
அதையடுத்து வழக்கறிஞர் அருள் பேசுகையில், “உயர்நீதிமன்றம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கவில்லை என கூறியுள்ளது. அன்புமணி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வழக்கு ராமதாஸூக்கும், தேர்தல் ஆணையத்திற்குமான வழக்காகும். இவ்வழக்கில் அன்புமணியை நீதிமன்றம் சேர்க்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரமில்லா கட்சி என்பதால், அவர் தலைவர் இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது.
இதையடுத்து அத்தரப்பு சார்பில், தேர்தல் ஆணையம் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்தது. அப்போது நீதிபதி அளித்த உத்தரவில், உங்களின் வாதத்தை பதிவு செய்து கொண்டோம். பாமகவிற்கு அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கவில்லை என்ற நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது. அன்புமணியை பாமக தலைவர் என அங்கீகரிக்கவில்லை. ஆனால், அதற்குள் அன்புமணி தரப்பு ஊடகங்களிடம் பொய்யான தகவல்களை கூறி, ஊடக அரசியல் செய்து வருகின்றனர்.
தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ பார்ம், பி பார்மில் பாமகவின் நிறுவனருக்குத்தான் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளது. பாமக ராமதாஸ் தலைமையில் இயங்கி வருகிறது. மாம்பழ சின்னம் ராமதாஸிடம்தான் உள்ளது. உறுப்பினராக இல்லாத அன்புமணி எப்படி பாமக தலைவராக முடியும். அப்படி சொல்பவர்மீது வழக்குத் தொடுக்கப்படும்” என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, “என்னை துரோகி என்ற துரோகத்திற்கு என்ன பதில் சொல்வது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின், ராமதாஸ் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் கொடுத்துள்ளோம்” என்றார்.

