23-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூரில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் 23 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட தவெக சார்பில் பெண்கள் உள்பட சுமார் 1000 பேர் தன்னார்வலர்களாக பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டம் சிறப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக தன்னார்வலர்களாக கலந்து கொள்ள உள்ள தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு கூட்டம், விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ள இடத்திலேயே நடத்தப்பட்டது. இந்த பயிற்சியை முன்னாள் டிஎஸ்பி சபியுல்லா வழங்கினார்.
கூட்டத்துக்கு பெருமளவில் பொதுமக்கள் வருவார்கள் என்பதால், விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவர்கள் முண்டியடிக்கும் சூழல் உருவாகலாம் என்றும், அத்தகைய நேரங்களில் கோபப்படாமல் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தன்னார்வலர்களுக்கு வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மருத்துவ உதவி மையம், நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனிப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தங்களுக்காக வழங்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆயிரம் தன்னார்வலர்களுக்கும் தனித்தனி ஐடி கார்டு, டி ஷர்ட், தொப்பி உள்ளிட்ட அடையாளப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அவர்கள் நாளை மாலை முதலே தங்களது பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. சுமார் நூறு பெண்கள் தன்னார்வலர்களாக பங்கேற்க உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வருகை தரும் வரையில் அவர்கள் வெளிப்புற ஒழுங்கு பணிகளில் ஈடுபடுவார்கள்.
இதையும் படிங்க: சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி: 8 ரயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும்
இதன் பிறகு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் பந்தலுக்குள் சென்று தன்னார்வலர்கள் பணியை தொடர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

