ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகங்களை காஸ் சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தீவிர தாக்குதல் காரணமாக,ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் பல இடங்களில் உணவகங்கள், தேநீர் கடைகள் மூடப்பட்டன. சில உணவகங்களில், வெரைட்டி ரைஸை குறைத்து, ஒரு சில உணவுகள் மட்டும் வழங்கப்படுகின்றன
ஏஜென்சி அலுவலங்கள் முற்றுகை
இதற்கிடையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் கேட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் ஏஜென்சி அலுவலங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து ஒரு வாரம் கடந்தும் வரவில்லை என்றும், சிலிண்டர் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்து, தகராறில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, ஏஜென்சி நிர்வாகி கூறுகையில், “காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பீதியால், ஒரு நேரத்தில் பலர் பதிவு செய்ய முயல்கின்றனர். இது தோல்வி அடைந்ததால், அலுவலத்தை முற்றுகையிடுகின்றனர்.
ஒரு சிலிண்டர் வழங்கி, அடுத்த சிலிண்டரை 25 நாள்களுக்கு பிறகு வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன” என்றார்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் ஆட்டோ உள்பட சிறிய ரக வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டன. சில இடங்களில் உள்ள காஸ் நிரப்பும் மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

